Tuesday, September 11, 2012

தஞ்சை பெரிய கோவில் கட்டப்பட்ட வரலாறு



ஆயிரம் ஆண்டுகளாக தஞ்சையில் தமிழரின் பெருமையை பறை சாற்றி கொண்டு உயர்ந்து நிற்கிறது தஞ்சை பெரிய கோயில்...
இது எப்படி சாத்தியமானது ? ? ?
கோயில் எப்படி கட்டப்பட்டது ????


            தஞ்சைப் பெருவுடையார் கோயில் அல்லது பிரகதீசுவரர் கோயில்  அல்லது தஞ்சை பெரிய கோயில் என அழைக்கப்படும் இது இந்து சமயக் கோயில் மேலும் தமிழரின் பாரம்பரியச் சின்னம் ஆகும்.

 10 ஆம் நூற்றாண்டில், சோழப் பேரரசு அதன் உச்ச நிலையிலிருந்தபோது, இராஜராஜ சோழ மன்னனால் கட்டப்பட்டது. ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும், பின்னர், தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில், தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்ட இக் கோயில், 17, 18ஆம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிருகதீசுவரம் ஆகியது.

 இத்தகையதொரு பிரம்மாண்டமான கோயிலை சுமார் 7 ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது.

இரண்டு அல்லது மூன்று தளங்களை மட்டுமே கொண்டு கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில், கற்களே கிடைக்காத காவிரி சமவெளிப் பகுதியில், 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயிலை ராஜராஜன் எழுப்பியது என்பது மாபெரும் சாதனையே. அது மட்டுமன்றி, கல்வெட்டுகள், சிற்பங்கள், ஓவியங்கள், வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல புதிய அம்சங்களையும் இத் திருக்கோயிலில் புகுத்தி கோயில் கட்டும் கலையில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவன் ராஜராஜன்.


தஞ்சாவூர் பெரிய கோயிலைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஆயினும் இவற்றில் முரண்பாடுகள் காணப்படுகின்றன. கோபுரத்தின் உயரம் 59.75 மீட்டர் முதல் 65.85 மீட்டர் வரை குறிப்பிடப்பட்டுள்ளன. எனவே சோழர் கால அளவுகளின்படி கோயிலின் திட்டமிடப்பட்ட உயரம் என்ன, கடைக்கால்கள் எந்த அடிப்படையில் திட்டமிடப்பட்டன. கட்டப்பட்டன, பாரந்தூக்கிகள் முதலியன இல்லாத ஒரு காலத்தில் சுமார் 60 மீட்டர் உயர கோபுரம் எவ்வாறு கட்டப்பட்டது.

இந்த கேள்விகளுக்கு விடைபெற நாம் ராஜராஜன் காலத்தில் கையாளப்பட்ட அளவு முறைகளைப் பற்றிச் சற்று தெரிந்து கொள்ளவது அவசியம்..

பெரிய கோயில் அளவுகோல்

எட்டு நெல் கதிர்களை அகலவாட்டில் ஒன்றோடொன்று நெருக்கமாக அமைத்து அந்த நீளத்தை விரல், மானாங்குலம், மானம் என்று அழைத்தனர். இருப்பத்தி நான்கு விரல் தஞ்சை முழம் என்று அழைக்கப்பட்டது.

தற்போதைய அளவின்படி ஒரு விரல் என்பது 33 மில்லி மீட்டராகும். கருவறை வெளிச்சுவர்களில் காணப்படும் கலசத்தூண்களின் அகலம் 10 விரல்களாகும், அதாவது 0.33 மீட்டர் ஆகும். இதுவே தஞ்சாவூர் பெரிய கோயிலின் அடிப்படை அளவாகும். இதனை நாம் அலகு என்று குறிப்பிடலாம். இந்த அடிப்படையில் விமானத்தின் திட்டமிட்ட உயரம் 180 அலகுகள். அதாவது சுமாராக 59.40 மீட்டர்.

சிவலிங்கத்தின் உயரம் சரியாக 12 அலகுகள்.


                 கருவறையின் இரு தளங்களிலும் விமானத்தின் பதின்மூன்று மாடிகளும் சேர்ந்து 15 தளங்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அலகுகளின் அடிப்படையில் கருவறை 24 அலகுகள் கொண்ட ஒரு சதுரம். கருவறையின் உட்சுவரும், வெளிச்சுவரும் முறையே 48 அலகுகள், 72 அலகுகள் அளவுடைய சதுரங்களாகும்.

பிரகாரத்தில் நாம் காணக்கூடிய விமானத்தின் அடிப்பகுதி 90 அலகுகள். இந்த அடிப்படையில் விமானத்தின் கடைக்கால் 108 அலகுகள்  பக்க அளவு கொண்ட பெரிய சதுரமாக இருக்கலாம் என யூகிக்க முடிகிறது. சரியான அளவுகள் தெரியவில்லை.

இந்த கடைக்கால் மிகக்குறைந்த ஆழத்திலேயே, அதாவது 5 அலகுகள் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்துள்ளது. கோயில் வளாகத்தின் அருகே பாறை தென்படுகிறது. ஆயினும் சுமார் 42,500 டன் எடையுள்ள விமானத்தை பாறையின் தாங்கு திறனைச் சோதித்துப் பார்க்காமல் கட்டியிருக்க மாட்டார்கள் என்று தோன்றுகிறது.

சுமார் 1.2 மீ சதுரத்தில்  0.6 மீ அளவு கற்களை ஒவ்வொரு அடுக்கிலும் நான்கு கற்கள் என்ற கணக்கில் அடுக்கிக் கொண்டே போய் பாறையில் எப்போது விரிசல்கள் விழுகின்றன என்பதைக் கவனித்த பின்னரே கடைக்காலின் அளவுகள் தீர்மானிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகள் இக்கோயில் நிர்மாணித்த சிற்பிகள் மேற்கொண்டனர் என்பது இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சமாகும்.

பெரிய கோயிலின் விமான வடிவமைப்பு

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது என்பது குறித்த குறிப்புகள் எதுவுமில்லை. சில சாத்தியக் கூறுகள் மட்டுமே பரிசீலிக்கலாம். கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்பட்டன. இங்கிருந்து விமானம் மேலே எழும்புகிறது. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார்  24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4.40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1.92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32.5 மீட்டராகும்.

 பதின்மூன்றாவது மாடியின் மேல் எண்பட்டை வடிவ தண்டு, கோளம், கலசம் மூன்றும் உள்ளன. இதன் மொத்த உயரம் 30 அலகுகள். அதாவது பிரகாரத்திலிருந்து விமானத்தின் 13-வது மாடி சரியாக 150 அலகுகள் (50 மீ) உயரத்தில் உள்ளது. தஞ்சை சிற்பிகள் இந்த உயரத்தை மூன்று சம உயரப் பகுதிகளாகப் பிரித்துள்ளனர்.

அதாவது, கருவறை மேல் மாடி உயரம் 50 அலகுகள், விமானத்தின் முதல் மாடியிலிருந்து 5-வது மாடி வரை 50 அலகுகள், விமானத்தின் 6-வது மாடியிலிருந்து 13-வது தளம் வரை 50 அலகுகள். இந்த மூன்று பகுதிகளுக்கும் அதன் உயரத்துக்கேற்ப தனித்தனியான சார அமைப்புகள் அமைக்கத் திட்டமிட்டிருந்தனர் என்று தெரிகிறது.

சாரங்களின் அமைப்பு

கருவறைக்கு ஒரு கீழ்தளமும் ஒரு மேல் தளமும் உள்ளன. மேல் தளத்தின் கூரை சரியாக 50 அலகுகள் (16.5 மீ) உயரத்தில் உள்ளது. இங்கு தான் முதல்கட்ட சாரம் - ஒரு சாய்வுப் பாதை முடிவுற்றது. ஒன்றுக்கு மேற்பட்ட சாய்வுப் பாதைகள் (தஅஙடந) உபயோகப்படுத்தப்பட்டுள்ளது தெரிகிறது. இவை பல ஆண்டுகளுக்கு நிலைத்து நிற்கும் வகையில் அமைக்கப்பட்டன. சாய்வுப் பாதையின் இருபக்கங்களிலும் கற்கள் - சுண்ணாம்புக் கலவை கொண்டு கட்டப்பட்ட உறுதியான சுவர்கள் இருந்தன. இந்த இரு சுவர்களுக்கு நடுவில் உள்ள பகுதி (4 அல்லது 5 மீ அகலம் இருக்கலாம்) பெரிய மற்றும் சிறிய உடைந்த கற்கள், துண்டுக் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்டன. மண்ணால் அல்ல. யானைகள் செல்வதற்கு ஏற்ற மிதமான வாட்டத்துடன் அமைக்கப்பட்டன. மழைநீர் வடியவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கோயிலின் திருமதில் சுவரும் (சுமார் 1 மீ குறுக்களவு கொண்டது) இதே பாணியில் கட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிட்டத்தக்கது.

இரண்டாவது கட்டமாக 50 முதல் 100 அலகுகள் வரை (சுமார் 16.5 மீட்டரிலிருந்து 33 மீட்டர் உயரம் வரை) விமானம் கட்டுவதற்குச் சற்று மாறுபட்ட சாரம் தேவைப்பட்டது. இது அமைப்பில் சீனாவின் நெடுஞ்சுவர் போல் ஓர் அரண் மதில் சுவர் அமைப்பாக செங்குத்தான இரு சுவர்களையும், அதன் நடுவே முதல்கட்ட சாரத்தைப் போல் யானைகள் செல்வதற்கேற்ற வழித்தடத்தையும் கொண்டிருந்தது. விமானத்தின் நான்கு பக்கங்களையும் சுற்றிச் செல்லுமாறு அமைந்திருந்த இந்த அரண் மதில் சாரம், கோபுரம் உயர உயர தானும் உயர்ந்து கொண்டே சென்றது. முதல் கட்ட சாய்வுப் பாதையின் இறுதிகட்ட மேடைச் சுவர்களுடன் இந்த இரண்டாம் கட்ட சாரத்தின் சுவர்கள் இணைக்கப்பட்டிருந்தன. இந்த கட்டுமானத்தின் அமைப்பில் மிகுந்த கவனம் தேவைப்பட்டது. இதுமட்டுமன்றி இந்த அரண் சுவர்களுக்கு நிறைய கற்களும் தேவைப்பட்டன. முதல் கட்ட சாரங்களில் சில கலைக்கப்பட்டு, அவற்றின் கற்கள் முதலியவை செங்குத்தான அரண் சுவர்கள் கட்டுவதற்கு உபயோகப்படுத்தப்பட்டன என்று நம்புவதற்கு இடமிருக்கிறது.

இறுதிகட்டமாக, 100 முதல் 150 அலகுகள் வரையிலான விமானப் பணிகளுக்காக மரத்தினாலான வலுவான சாரம்  அமைக்கப்பட்டது. சவுக்குக் கழிகள், சணல் கயிறுகள் தவிர்க்கப்பட்டன. தரமான நல்ல உறுதியான மரங்களிலான தூண்கள் , நேர்ச்சட்டங்கள் , குறுக்குச் சட்டங்கள் அனைத்தும் முட்டுப் பொருத்துகள்  மூலம் இணைக்கப் பெற்றன. இவை இரண்டாவது கட்ட மதில் அரண் சாரத்தில் நிலை நிறுத்தப்பட்டன. செங்குத்தான தூண்களும் நேர் சட்டங்களும் மேடைகளை விரும்பிய விதத்தில் அமைத்துக் கொள்ள
உதவின.

அரண் மதில் உட்சுவரிலிருந்து மேடைகளுக்குக் கற்களையும் சிற்பிகள் மற்றும் ஏனைய தொழிலாளர்களையும் எடுத்துச் செல்ல சாய்வுப் பாதைகள் அமைப்பது இந்த முறையில் எளிதாகவிருந்தது.

மேலே கூறிய அமைப்பு ஒரு சாத்தியக் கூறு. இரண்டாவது கட்ட அரண் மதில் சுவர் சாரத்துக்கு முதல் கட்ட சாய்வுப் பாதைகள் கலைக்கப்பட்டு, அதன் கற்கள் பயன்படுத்தப்பட்டன. விமானக் கட்டுமானப் பணிகள் அனைத்தும் முடிவுற்றதும் சாரங்கள் கலைக்கப்பட்டு, கற்கள், மண், மரம் அனைத்தும் கோயில் மதில் சுவர், மதில் சுவர் உள்புறத்தில் காணப்படும் துணைக் கோயில்கள், நுழைவுவாயில்கள், சாலைகள் அமைப்பது முதலிய கட்டுமானங்களில் எவ்வித சேதாரமுமின்றி முழுமையாகப் பயன்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. !!

*முன் தாழ்வாரம், நந்தி மண்டபம், கருவூர்த் தேவர் கோயில, அம்மன் கோயில், சுப்பிரமணியர் கோயில் ஆகியன பிற்காலங்களில் கட்டப்பட்டன.


*தஞ்சைப் பெரியகோவிலில் உள்ள நந்தி ஒரே கல்லால் செய்யப்பட்டது. இதன் உயரம் 14 மீ, நீளம் 7 மீ, அகலம் 3 மீ ஆகும். நந்தி மண்டபம் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது

*1010ம் ஆண்டு முடிக்கப்பட்ட இந்த கோயிலுக்கு 2010வது ஆண்டோடு 1000 வது பிறந்தநாளை (சதய விழா) அப்போதைய தமிழக முதல்வர் மு.கருணாநிதியால்  சிறப்பாக கொண்டாடப்பட்டது 

*1987ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டது[3]

*மத்திய அரசு 1995ம் ஆண்டில் மாமன்னர் ராஜராஜ சோழன் உருவம் பதித்த 2 ரூபாய் தபால் தலையை வெளியிட்டது.

*தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பாக கடந்த 1954&ம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி  1000 நோட்டை வெளியிட்டது. அதில் தஞ்சை பெரிய கோவில் எனப்படும் பிரகதீசுவரர் ஆலயத்தின் வியத்தகு தோற்றம் பதிக்கப்பட்டது.

நன்றி!!!
ம.ஞானகுரு

16 comments:

ஸ்ரீ.... said...

தஞ்சைப் பெரிய கோவிலைப் பற்றி அரிய செய்திகளைத் தந்ததற்கு நன்றி. மிகவும் பயனுள்ள இடுகை.

ஸ்ரீ....

isgokulkumar said...

சிறப்பான பதிவு,
இந்த கோவில் எவ்வாறு கட்டப்பட்டது என்ற வரலாறு தெரிந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு பிற பதிவுகளுக்கு கிடழ்த்த அளவு சிறந்த குறிப்புகள் நமது வரலாறு பற்றி கிடப்பது கடினம் என்றே கருதுகிறேன்.
அழிந்த தமிழர்களின் வரலாறு பதிவேற்ற பட வேண்டும் என்பது எனது கருத்து.

ம.ஞானகுரு said...

நான் பல தமிழ் ஆங்கில இணையதளங்களில் தேடிவிட்டேன் பெரிய கோவில் கட்டப்பட்டதற்கான தெளிவான விளக்கங்கள் இல்லை நண்பா
இருந்திருந்தால் குறிப்பிட்டிருப்பேன்

ம.ஞானகுரு said...

உண்மை தான் கோகுல் குமார் அவர்களே
பொதுவாகவே வரலாற்று பதிவுகளுக்கு வரவேற்ப்பு குறைவு தான். 2012 இல் உலகம் அழியுமா நு ஒரு பரபரப்பான தலைப்பில் தொடர் எழுதினால் 1000 படிக்றாங்க. வரலாற்று பதிவுகளுக்கு அதில் பாதி வரவேற்ப்பே கிடைக்கிறது

நான் இந்த பதிவு எழுதுவதற்காக பல இணையதளங்களில் தேடிய போது ஆங்கில தளங்களில் உள்ள அளவுக்கு தெளிவான விளக்கங்கள் கொண்ட எந்த தமிழ் இணையதளமும் இல்லை...

ம.ஞானகுரு said...

வருகைக்கு நன்றி ஸ்ரீ அவர்களே

கலாகுமரன் said...

கூடுதலான தகவல்களுடன் சிறப்பான பதிவு ஞானகுரு, வாழ்த்துக்கள்.

MARI The Great said...

இணையத்தில் இருக்கும் உருப்படியான மிகச் சொற்பமான பதிவர்களில் நீங்களும் ஒருவருர் நண்பா!

தாங்கள் தொடர்ந்து இதுபோன்ற தரமான Informative post-களை எழுத வேண்டுகிறேன்!

Vijayan Durai said...

கலக்குற குரு ,நல்ல கட்டுரை !படங்கள் அருமை

Vijayan Durai said...

கமென்டிற்கு Pop up setting வை ஒவ்வொரு முறையும் முழு பேஜும் லோடு ஆகுது.

Unknown said...

IT IS VERY USE FULL TO KNOW ABOUT THE THANJAOR TEMPLE( TAMILAN )WE ARE PROUD FOR THAT

raj said...

very nice

உறையூரான்... said...

எழுத்தாளர் பாலகுமாரன் அவர்கள் எழுதிய "உடையார்" படியுங்கள் .. தஞ்சை
பெரிய கோவில் பற்றிய முழு விவரமும் தெரியும் .. அதை தவிர வேறு எனக்கு தெரிந்து பெரிய கோவிலை இவளவு விவரமாக எழுதவில்லை....

உறையூரான்... said...

nalathu

Unknown said...

தமிழனின் அடையாளம் தஞ்சை பெரிய கோவில்

Unknown said...

தமிழனின் அடையாளம் தஞ்சை பெரிய கோவில்

Unknown said...

அகமும் புறமும் போற்றப்பட்ட மரத் தமிழர்களின் மிச்சம் தான் நாம்.. வாழ்க தமிழ்...