தொலை நோக்கி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் மனிதன் விண்வெளியைப் பற்றி நிறைய தகவல்களை அறியஆரம்பித்தான். தொலை நோக்கி 1609 ஆம் ஆண்டு கலிலியோ என்ற இத்தாலிய வானியல் வல்லுனரால் கண்டுபிடிக்கப்பட்டது. தொலைநோக்கி (Telescope) என்பது வேறு ஒன்றும் இல்லை. அது நம்முடைய கண்ணைப் போல ஒரு பெரிய அளவான கண் அவ்வளவுதான்.
நம் மனித கண்ணின் மணியை (Pupil) விட பல மடங்கு பெரியதாக இருப்பதால், அது தன்னுடைய மிக அதிகமான பரப்பளவில் ஒளியை வாங்கி அதை ஒரே இடத்தில் குவிக்கிறது. அப்போது இந்தப் பொருள் நம் கண்ணால் காண்பதை விடளவும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது. நாம் வெறுங்கண்ணால் பார்க்கும் போது விண் வெளியில் வெறும் 6000 விண்மீன்களைத்தான் காண முடிகிறது. தொலைநோக்கி என்பது ஒரு பொருளிலிருந்து போதுமான அளவு ஒளியை சேகரித்து அதை குவிப்பதால், நம் கண்களுக்குத் தெரியாத மங்கலான விண்மீன்களைக் கூட தொலை நோக்கி காட்டி விடுகிறது.
கலிலியோ 1609 ஆம் ஆண்டு முதன் முதலில் தான் கண்டுபிடித்த தொலைநோக்கியின் மூலமாக வானத்தைப் பார்த்த போது விண்ணில் மனிதனின் கண்களுக்குப் புலப்படாத, மங்கலான விண்மீன்களைக் கண்டு வியப்படைந்தார். சர் ஐசக் நியூட்டன் என்ற ஆங்கில விஞ்ஞானி ஒளியை வெவ்வேறு நிறங்களாக முப்பட்டகக் கண்ணாடி (Prism) வழியாக செலுத்திப் பிரித்துக் காட்டினார். அவர் சூரிய ஒளிக் கதிரை கண்ணாடியாலான முப்பட்டகக் கண்ணாடி வழியாக (முக்கோணம் போன்ற வடிவமுடையது) செலுத்திய போது, அந்த ஒளியானது சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை, நீலம் மற்றும் ஊதா என்கிற ஒளிப்பட்டைகளாகப் பிரிந்ததைக் கண்டார்.
அதாவது நாம் காணும் சூரிய ஒளி என்பது தூய்மையான வெந்நிற ஒளி (White Light) அல்ல, அது பல விதமான ஒளிக்கதிர்களின் மொத்தக் கலவை தான் என்று நியூட்டன் நிரூபணம் செய்தார். இந்த ஒவ்வொரு ஒளிக்கதிரும் குறிப்பிட்ட அலை நீளத்தைக் (Wave Length) கொண்ட அலைகளாக உள்ளன. முப்பட்டகக் கண்ணாடி என்பது எல்லா நிறங்களும் கலந்து ஒன்றான வெண்மை நிற ஒளியை அதன் தனித்தனியான நிறங்களாகப் பிரிக்கிறது.
0 comments:
Post a Comment